Tuesday, October 23, 2012

Markez Al Islah

மர்க்கஜ் அல் இஸ்லாஹ் 

ஆலிம்களுக்கு தகுதிமேம்பாட்டுக்கான 
பயிற்சி மையம்.


      மர்க்கஜ் அல் இஸ்லாஹ் - இது மெளலவிகளுக்கு பல துறைகள் சார்ந்த பயிற்சிகளை அளிக்கும் ஒரு பயிற்சி மையம் (Practical Training Institute).

        இது ஆலிம்சமுதாயத்தை முற்றிலும் மேம்படுத்தி, உம்மத்தே முஹம்மதியாவுக்கு முன் மாதிரி முன்னோடிகளாக இருந்து வழிநடத்திட, சுய லாபமற்ற முற்றிலும் இலவசமான ஒரு சேவை மையம் ஆகும்.


கண்ணியத்திற்குறிய உலமாக்களின்

மேலான சமூகத்திற்கு பணிவான வேண்டுகோள்

மஸ்ஜிதுகளின் தொடார்பிலான சேவைகளுக்கும், அம்மஸ்ஜிதைச்சார்ந்த மஹல்லாவாசிகளின் மார்க்கஞான வளார்ச்சிக்கும்,அவார்களின் இஸ்லாமிய வாழ்வுக்கான வழிகாட்டல்களுக்கும், மேலும் ஜமாஅத் கட்டமைப்பு சீர்குலைந்து விடாமல் பாதுகாக்கப்படுவதற்கும் ஸ்தல மஸ்ஜிதுகளில் இமாம்களாக சேவையாற்றி வரும் ஆலிம்களே முழுமையான பொறுப்புதாரிகளாக இருக்கிறார்கள்.

ஆனால் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சில மஸ்ஜிதுகளைத்தவிர்த்து தமிழகத்தின் பெரும்பாலான மஸ்ஜிது மஹல்லாக்களில் இமாம்களின் சேவைகள் இமாமத் செய்வது, சுக-துக்க நிகழ்வுகளை முன்னிருந்து நிறைவேற்றுவது ஆகியவற்றைக்கொண்டு சுருக்கமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதனால் நம் சமுதாயத்தின் இஸ்லாமியம் சார்ந்த வாழ்வமைப்பு சீர்குலைந்து வருகிறது. ஜமாஅத்தின் கட்டமைப்பிலும் நாளுக்கு நாள் பிரிவினைகள் மேலோங்கியதாக காணப்பட்டு வருகிறது. இது எதிர்காலத்தில் இஸ்லாமுக்கும் அதனைச்சார்ந்த சமூகத்திற்கும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இக்கருத்து மூத்த உலமாக்களாலும், சமுதாய நலனில் அக்கறை உள்ள ஆர்வலர்களாலும் நீண்டகாலமாக உணரப்பட்டு வருகிறது. 

இந்தியத்திருநாடு மதச்சார்பற்ற கோட்பாட்டை அரசியல் சாசனமாக கொண்டிருப்பதாக பறைசாற்றப்பட்டு வருகிறது.  ஆனால் நடைமுறையில் முஸ்லிம்களாகிய நாம் வாழ்வியலில் சமபங்கையோ சமநீதியையோ அரசாங்க துறையிலிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ பெற முடிவதில்லை. அதனால் பிற சமுதாயத்தவர்களைப் போன்ற சமநிலைவாழ்வை அனுபவிக்க முடியாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளோம். நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் நமது நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நமது தனிவாழ்வும் பொது வாழ்வும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் வகுப்பு துவேஷிகளின் திட்டமிட்ட சூழ்ச்சிகளினால் பல்வேறு பாதிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் நாம் ஆளாகியுள்ளோம். இச்சூழ்நிலையில் நம்மையும் நமது இஸ்லாமிய கலாச்சாரங்களையும் சீர்குலைவுகளுக்குள்ளாகி விடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் நம்மைச்சார்ந்ததாகவே ஆகிஇருக்கிறது. அதற்கு நமது சமுதாய (மஹல்லா) கட்டமைப்புகளை ஒருங்கிணைப்புடன் திகழச்செய்வது மிகவும் அவசியமாகும். இதுபற்றி தூரநோக்குடனும் ஆழமாக சிந்தித்தும் திட்டமிட்டும் செயலாற்ற கடமைப்பட்டிருக்கிறோம். இது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். 

எனவே மஹல்லா ஜமாஅத்தின் கட்டமைப்பு தீனின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டு சீராக அது நிர்வகிக்கப்படவும் வேண்டும். இவ்வாறான சீர்திருத்தம் செய்யும் பணியை எங்கிருந்து, யாரிடமிருந்து ஆரம்பம் செய்து செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தளங்களில் பரிசீலிக்கப்பட்டு வந்துள்ளது. இது தீனின் அடிப்படையிலான சீர்திருத்தப்பணி என்பதால் தீனை அறிந்த ஆலிம்களிலிருந்தே இப்பொறுப்புள்ள பணி துவங்ங்கப்பட வேண்டும் என்பதே பொருத்தமானதாகும். அதுவே சீரியபலனை அளிக்க வல்லதாகவும் ஆகி இருக்க முடியும்.

சமுதாயப் பேரணியை வழிநடத்திச் செல்லும் தளபதிகளாக அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உலமாக்கள். அவர்களின் பொன்னான இளமைப்பருவம் இப்புனிதப்பணிக்குத் தேவையான மார்க்க கல்வி ஞானங்களைப் பெறுவதற்காகவே சொந்தமாக்கப்பட்டிருந்தது. நான்கு சுவற்றுக்குள் பல்வேறு அசௌகரியங்களையும் தாங்கிக் கொண்டு எதிர்கால வாழ்வில் உலகியல் ரீதியான உயர்வுகளைப் பற்றி எவ்வித சிந்தனையையும் மனதில் கொள்ளாது சன்மார்க்க கல்விகற்கும்  பணியை இந்த ஜெயசீலர்கள் நிறைவு செய்திருக்கிறார்கள். 

அத்தியாகச்சீலர்களில் எண்பது சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் மஸ்ஜிதுகளில் இமாம்களாக சேவை செய்யும் வாய்ப்பை பெறுகிறார்கள். அவர்களை நம் சமுதாயத்தவர்கள் தமது தீனிய்யத்தான வாழ்வியல் தேவைகள் அனைத்திற்கும் வழிகாட்டிகளாக பயன்படுத்திக்கொள்வது அந்தந்த மஹல்லாவைச் சார்ந்தவர்களின் கட்டாயக்கடமையாகும். அதுபோன்றே இமாம்களாக பொறுப்பேற்க முனையும் இளம்மௌலவிகள் தங்கள் மீதுள்ள இம்மாபெரும் மகத்துவம்மிக்க கடமையை செவ்வனே நிறைவேற்றிட தேவையான அனைத்து தகுதிகளையும் தங்களில் மேம்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். சகமாணவர்கள் மற்றும் தமக்கு போதிக்கும் உஸ்தாத்மார்கள் என்ற ஒரு சிறிய தொடர்பு வட்டத்திற்குள் மட்டுமே பழகி தங்களின் கல்விகற்கும் பருவத்தை நிறைவு செய்திருக்கும் இளம் உலமாக்கள் பலதரப்பட்ட மக்களுக்கு மத்தியில் அதிக பொறுப்பும் புனிதமும் மிக்க “இமாமத்” சேவைக்குள் நுழைகிறார்கள். கடினமான இப்பணியை செவ்வனே நிறைவேற்றிட கடமைப்பட்ட அவர்கள் அதற்குத்தேவையான தகுதிகளை தங்களில் வளர்த்துக்கொண்டாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது பிரத்தியட்ச உண்மையுமாகும்.

ஆகவே. மத்ரஸா பாடதிட்டங்களின்படி ஓதி முடித்த மௌலவிகளுக்கு இமாமத்தைச்சார்ந்த சேவைகளை சிறப்பாக ஆற்றிட தற்போதைய கால தேட்டங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அத்தியாவசியமான செயல்முறை பயிற்சிகளையும், வழிகாட்டல்களையும், பிரத்தியேகமாக போதிக்கப்பட வேண்டியதும் அதனை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும். 

    இது பற்றிய ஆய்வுகளை செய்வற்காக பாண்டிச்சேரி மர்க்கஜ்-அல்இஸ்லாஹ் சார்பில் மஷ்வரா கூட்டம் சென்ற ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.  அக்கூட்டத்தில் பெங்களுரு சபீலுர் ரஷாத் அரபிக்கல்லுரியின் நாஜிர் மௌலானா மௌலவி முஃப்தி முஹம்மது அஷ்ரப் அலி ஹளரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள், பாக்கியாத்துஸாலிஹாத் அரபிக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஹளரத் முன்னிலை வகித்தார்கள். வாணியம்பாடி மதரஸா நாஜிர் மௌலானா வலிய்யுல்லாஹ் ரஷாதி, நீடூர் மதரஸா மிஸ்பாஹுல் ஹுதா நாஜிர் மௌலானா முஹம்மது இஸ்மாயில் பாக்கவி, மௌலானா  ஜியாவுத்தீன் பாக்கவி, மௌலானா கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி,  புதுச்சேரி  டவுன் காஜி மௌலானா ஸயீது பாக்கவி, ஜாமிஆ ரைஹான் முதல்வர்  மௌலானா தொண்டி முஸ்தபா ரஷாதி,   மௌலானா  ஜாபர் சாதிக் பாக்கவி, ஜமாஅத்துல் உலமா மாதஇதழ் ஆசிரியர் மௌலானா இப்ராஹிம் பாக்கவி,  மௌலானா ரபீயுத்தீன் பாக்கவி,   ஜமாத்துல் உலமா துணை தலைவர் மௌலானா இல்யாஸ் காஸிமி,  மற்றும்  தமிழகத்தின் பலபாகங்களிலிருந்து வருகை தந்திருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட நாஜிர்கள் மற்றும் உலமாக்கள் பங்கேற்றனர். இதற்காக பிரத்தியேகமாக தொகுக்கப்பட்டுள்ள பாடதிட்டத்தையும், செயலாக்க பயிற்றுவிப்பு முறைகளையும் ஒருமனதாக அங்கீகரித்ததுடன் தாங்களும் இப்புனிதப்பணியில் பங்களிப்பாளர்களாக செயல்பட வாக்களித்துள்ளார்கள்.